Tag Archives: கதம்பம்

அது

விண்ணை முட்டும் சிகரமோ அல்லது
மண்ணை நனைக்கும் மாரியோ

தழுவிச் செல்லும் மென்காற்றோ அல்லது
தவழ்ந்து செல்லும் சிற்றாறோ

மலர்ந்து மணம்தரும் மலரோ அல்லது
மலரின் இன்பத் தேனோ

நீரில் நீந்தும் கயல்தானோ அல்லது
நினைவில் நிலைக்கும் பிம்பமோ

எண்ணம் சேர்ந்து எழுத்துரு பெற்ற
இனிய செந்தமிழ்க் கவிதையோ

செவிவழிச் சென்று இதயத்தில் நிலைத்து
மனதிற்கு இன்பம்தரும் இசையோ

அரிதென நினைப்பதை எளிதென மாற்றும்
தளராது செய்யும் முயற்சியோ

உயர்விலும் தாழ்விலும் துணையாய் நின்று
அரணாய்க் காக்கும் நட்போ

மெய்யிரண் டெனினும் உயிரொன் றென்ற
மெய்யான காதல் உணர்வோ

செய்வினை ஈன்ற நிதியோ அல்லது
நல்வினை ஈன்ற புகழோ

எங்கும் எதிலும் நிலைபெற் றிருந்து
என்றும் நம்மைக் காக்கும் இறையோ
அன்று நமக்கு உயிர்தனை அளித்து
இன்றும் உயிராய் விளங்கும் தாயோ

கற்றோர் ஏத்தும் பெரறிவோ அல்லது
கல்லாதோர் தேடும் சிற்றறிவோ – முற்றும்
அறிந்தோர் அறியாத நுண்ணறிவோ – எதுவும்
அறியாதோர் அறிந்த நல்லறிவோ அது

திறக்காத கண்ணில் தெரியும் காட்சியோ
மலராத மலர்தான் பரப்பும் மணமோ
உதிக்காத சூரியனின் ஒளிதரும் கதிரோ
இல்லாத ஒன்றின் இருக்கும் தோற்றமோ

இறையவன் செதுக்கிய சிற்பமோ அல்லது
எந்தன் இதயம் அதனை செதுக்கியதோ
இயற்கை வரைந்த ஓவியமோ அல்லது
எந்தன் மனம்தான் நிறமும் அளித்ததோ

கண்ணில் காட்சி தோன்றவில்லை
நினைவில் எதுவும் நிலைக்கவில்லை
விடையும் எவரும் கூறவில்லை
நானும் நாடிச் செல்லவில்லை
ஏனென நானும் எண்ணியதும்
மனதில் தோன்றியது இதுவே :

மனதிற்கு இன்பம் தருவது அது
துன்பத்தை நீக்கும் மருந்து அது
வாழ்வில் வழிகாட்டும் ஒளிதான் அது
என்றும் துணையாய் இருப்பது அது

எதுவென எண்ணவும் இயலாது
எதுவாயினும் மறக்க இயலாது
தோற்றம் உருவம் கிடையாது
நிறமோ மணமோ கிடையாது

அதனை,
நானும் நினைக்க முயல
மனதில் எதுவும் தோன்றவில்லை
நானும் எழுத முயல
சொற்கள் எதுவும் சேரவில்லை

எதுவாயினும் அதனை விளக்க
எண்ணும் எழுத்தும் எல்லையில்லை
எங்கும் அதற்கு மொழியில்லை

அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் வேரூன்றி நின்று
புரியாத புதிராய் விளங்குவது
அது

மனமும் மனமும்

இருபெரும் நாட்டிற்கு இடையே பெரும்போர்
ஒருவர் இறப்பின் இருவரும் இறப்பர்
வெற்றியும் தோல்வியும் கிடையாது – இது
ஒற்றுமையில் வேற்றுமை காணும் போர்
படையினர் எவரும் இலர் எனினும்
தடைகள் பலவும் உள – இதனை
மதியைக் கொண்டு வெல்ல நினைப்பின்
சதியை அதுவே செய்வதை உணர்வீர்.

போர் நிகழ்வது இங்கே – எனது
மனதிற்கும் மனதிற்கும் இடையே !

எண்ணம் போலச் செயலெனக் கூறுவர்
நன்மை நினைப்பின் செயலும் நன்மை
தீமை நினைப்பின் செயலும் தீமை
இரண்டும் இருப்பின் செயலெத் தன்மை ?

எந்தன் மனமோ பிரிந்தது இரண்டாய்
ஒன்றோ நல்வழிச் செல்கிற தெனினும்
ஏனையது தீமையை நாடிச் செல்வதைத்
தவிர்க்க இயலாமல் தவிக்கின்றேன் நான்.

விதியை மதியால் வெல்ல நினைக்குமென்
மதியே எனக்கு விளங்க வில்லை.

இன்பம் சிலநொடி நிலவ, மறுநொடி
துன்பம் மனதில் நிலைகொள் கிறதே.

மலையதன் சிகரத்தில் நிற்கும் நானோ
ஆழ்கடல் அடியில் தவிக்கின் றேனே.

அகம்தனில் தானோ குற்றம் அல்லது
புரம்தனிலோ என நானறி யேனே.

நேற்றைய நிகழ்வை எண்ணி வருந்தி
நாளைய நிகழ்வை எண்ணி பயந்து
இன்றைய நிகழ்வில் கவனம் இல்லாது
என்னை நானே அழிக்கின் றேனே.

நிலையாய் எதையும் நினைக்காமல் என்மனம்
மலையென ஒருகணம் விளங்க மறுகணம்
மடுவாய் சுருங்கி விடுவது ஏனோ ?

நானே ஒருவன் தானோ அல்லது
எனக்குள் இருவர் உளரோ அவருள்
ஒருவர் மகிழ்வில் திளைப்பினும் மற்றவர்
துன்பத்தில் தவிக்கும் மனிதனோ என
விளங்க வில்லை ஒருங்கே எனக்கு

என்னுள் நிகழும் போராட்டம் இதுவே :

“நானும் இங்கே வருந்தி வாடிட
உனக்கு அங்கே நீராட்டோ ?
பலரும் என்னை இங்கே இகழ்ந்திட
உனக்கோ புகழே பொழிகிறதோ ?
என்னை நானிங்கு அழித்துக் கொள்ள
நீயோ அங்கே வளர்வாயோ ?
நானோ இங்கே மூழ்கும் தருணம்
நீயோ அங்கே பறப்பாயோ ?
அசுரர்கள் என்னை அழித்திட உன்னை
அரசர்கள் அழைத்து வாழ்த்தினரோ ?”

இதுபோல் ஒருமனம் மறுமனம் வினவ
விடையும் அறியாது தவிக்கின்றேன்

அகமெது புறமெது புரியவில்லை
வெண்மை கருமை வேற்றுமையில்லை
ஞாயிறு திங்கள் இரண்டுமில்லை
அல்லும் பகலும் மாறவில்லை
புகழும் இகழும் பிரிவில்லை
நகரமும் நரகமும் தனித்தில்லை
விண்ணும் மண்ணும் சேரவில்லை
எண்ணும் எழுத்தும் ஒன்றவில்லை
உயிருடன் மெய்யும் இணையவில்லை
இதுபோல் அனைத்தும் வேற்றுமையாய்
எண்ணும் எந்தன் மனமதனை
ஒருநிலைப் படுத்த இயலவில்லை.

சினமது மனதை சிதைத்ததோ
பகையது என்னைப் புதைத்ததோ
என்வினை எதிர்நின்று தடுத்ததோ
பிறர்வினை தானிதன் காரணமோ
பேராசை கண்ணை மறைத்ததோ
நம்பிக்கை சிதைந்து விட்டதோ
இவைபோல் பலப்பல வினாவிற்கு
விடையும் கிடைக்காது போகுமோ ?

ஒருகால் ஒருபாதையில் வைத்து
மறுகால் மறுபாதையில் வைத்து
நானும் இங்கே நிற்கின்றேன்
பாதைகள் பிரிந்து செல்கின்றன
ஒருமனம் ஒருபாதை விரும்ப
மறுமனம் மறுபாதை விரும்ப
பயணம் தொடர இயலாமல்
நடுவில் கிடந்து தவிக்கின்றேன்.

இந்நிலை என்று முடியுமோ
மனங்களும் ஒன்றாய் சேருமோ
பாதையில் ஒன்றில் நானும்
பயணம் தொடர முடியுமோ

வாழ்வில் நிம்மதி வேண்டும்
நல்வழிச் செல்ல வேண்டும்
தீயவை வெல்ல வேண்டும்
தீர்ப்பு சரியாய் எடுக்கவே
நன்மதி ஒன்றும் வேண்டும்
இவற்றை நானும் பெறவே
சேர்ந்து விடுங்கள் – என்
மனமும் மனமும்

முறிந்த மகுடம்

மாண்டனரோ வீரர் களிறுபடு களத்தில்
வீழ்ந்தனவோ முப்படை குருதிக்கடல் தன்னில்
சுருண்டனவோ குதிரையும் தந்தமுடை யானையும்
கவிழ்ந்ததோ பேரரசன் தன்னுடை நாடு ?

என்றும் வைகறை தவறாமல் எழுந்து
இருள்சூழ் உலகிற்கு கண்பார்வை அளித்து
எழுச்சிதரும் பகலவன் ஏனோ இன்றுமட்டும்
நாள்முழுதும் உறங்கி எழுந்துவர மறுத்தானோ ?

கார்மேகம் சூழ்ந்து அசையாது நின்று
மக்கள் மாக்கள் அசையா மரங்கள்
பயன்கருதா மாரி, மென்காற்று வீசியதும்
கலைந்து மறைந்து விட்டானோ வருணன் ?

புழுதிப்புயல் வீசிய பலம்கொண்ட வீச்சில்
கண்கள் மறைத்து முன்நிற்ப தெவரென்று
தெரியாத வண்ணம் ஞாலம் சூழ்ந்து
துயரம் தந்தானோ இன்று வாயு ?

உண்ணுவ தனைத்தும் படைப்பதற் குதவி
பயன்கொண்ட வகையில் இருந்த நன்மைத்தீ
ஏனோ இன்று சினமதிகம் கொண்டு
யாவையும் கரிபோல் உருமாற்றினானோ ?

அல்லது,

துள்ளி குதித்தோடிய கடலதன் அலைகள்
நிலைமாறாது நின்று அமைதி காக்கின்றனவோ ?
மின்னும் விண்மீன் மின்னுவதை விட்டு
எங்கோ விண்ணுள் மறைந்து விட்டதோ ?
நிதிவேண்டா மென்று இறையவன் சந்நிதியை
தஞ்சமடைந்த மானிடனை எமாற்றினானோ தலைவன் ?

உன்னிடம்,

“வீழ்ந்திடு இதுதருணம்” என்றானோ எமன் ?
முற்பிறவி பாவமோ முன்னோர்தம் தீச்செயலோ
அல்லது எவரேனும் தீயோர்கள் தீவினையோ
உன்னைத் துன்புறுத்தி வாட்டுவது ஏதது ?

இவற்றுள்நீ உணர்த்துவது ஏது ? என்மனம்
விடையறியாமல் படும்வேதனை நீயறி வாயோ ?
நல்லெண்ணம் உதிக்காமல் இதுபோன்ற எண்ணம்பல
அல்லும்பகலும் அலை பாய்கின்றன என்னுள்ளதில்
மனமிரங்க முடியாமல் உயிர்தர இயலாமல்
தவிக்கும் எனக்கு விடைதான் ஏது ?

நீ,

அதிகாலை மலர்ந்து நறுமணம் பரப்பி
கடந்து செல்வோர் உள்ளம் கவர்ந்து
வானம்பார்த்து உயர்ந்து நின்று, கம்பீரத்
தோற்றத்துடன் காட்சி தருவாய் உலகிற்கு

என்றும் உனக்கு நீரைக் கொடுத்து
என்று மலர்வாய் எனக்காத்து நின்று
தோன்றிய உடனேயுன் அழகை ரசித்தவர்
இன்றுபடும் வேதனையை அறிவாயோ மலரே ?

மங்கையர் அவர்தம் நீண்ட கூந்தலில்
அழகைப் பெருக்கும் விதத்தில் அமர்ந்து
இன்பம் தரும் நீதானோ இங்கே
அழகிழந்து நிலத்தில் மாண்டு கிடக்கின்றாய் ?

உன்னிடம் பொருந்திய சிவப்பு – அது
இயற்கை அளித்த நிறமோ அல்லது
குருதியின் குறியோ எனத்தெரிய வில்லை
நீயே கூறுதி நின்செம்மை உணர்த்துவதேது ?

உன்னைத் தாங்கும் முள்கொண்ட காம்பு
மறந்து விட்டதோ உன்னை இன்று
காம்பில் இருந்து முறிந்து நீயும்
கீழே விழுந்து கிடக்கின்றாய்
பூமியில் புதைந்து கிடக்கின்றாய்

காலம் உனக்கு முடியவில்லை
எமனும் உன்னை நாடவில்லை
மரணம் உன்னை அழைக்கவில்லை
எனினும் பிரிந்து சென்றுவிட்டாய்
கடவுளர் பாதம் சரண்புகுந்தாய்

உன்னை இனிநான் எங்கு காண்பேன் ?
என்று காண்பேன் ? எப்படிக் காண்பேன் ?
மானிடர் பூமியிலோ ? தேவர் உலகத்திலோ ?
இருள்சூழ் நரகத்திலோ ?
விடையை அளித்துவிடு
ரோஜாவே …